ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமரை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ADDED : டிச 11, 2025 12:56 PM

ஜெருசலேம்: ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பிற்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி இடையே முக்கிய சந்திப்பு நடைபெற இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
வரி விதிப்பால் உலக நாடுகளிடையே அமெரிக்கா கடும் எதிர்ப்பினை சம்பாரித்து வருகிறது. இதன் விளைவாக, அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகள் கைகோர்க்கும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அண்மையில் ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி இடையே விரைவில் சந்திப்பு நடைபெற இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருநாடுகளிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் அமைச்சர்கள் குழு இந்தாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்திருந்தனர்.
அப்போது, இந்தியா, இஸ்ரேல் இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேபோல, கடந்த மாதம் இஸ்ரேலுக்கு சென்றிருந்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

