ஆப்கன் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தான்; இந்தியா கண்டனம்
ஆப்கன் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தான்; இந்தியா கண்டனம்
ADDED : டிச 11, 2025 11:36 AM

நியூயார்க்: ஆப்கன் மீது பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானுக்கு , ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர கத்தார், துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. ஆனால், அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் எல்லை தாண்டி தாக்குதலுக்கு, ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்த தூதர் ஹரீஷ் பர்வதனேனி கூறியதாவது; பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஐநா உதவிக் குழுவிற்கான கவலையை இந்தியாவும் பகிர்ந்து கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பல ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வரும் ஆப்கன் மக்கள் மீது, பயங்கரவாதத்தை ஏவி விடும் பாகிஸ்தானின் போக்கு கண்டிக்கத்தக்கது.இந்த செயல் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறியதாகும். கடினமாக சூழலில், மீண்டும் கட்டமைக்க முயலும் பலவீனமான, பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் ஐநா சட்டத்தை மீறிய செயலாகும். பாகிஸ்தானின் இந்த செயல்ளை கண்டிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், ஆப்கனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம், என தெரிவித்தார்

