பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
பீஹார் தேர்தல்: ரூ.108 கோடி மதிப்பு பணம், பொருட்கள் பறிமுதல்
ADDED : நவ 03, 2025 08:01 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அம்மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட  பணம், பொருட்கள், மதுபானத்தின் மதிப்பு 108 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நவ.,6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் உள்ளிட்டவையும் விநியோகிக்கப்படுகின்றன.  இதனை தடுக்க தேர்தல் கமிஷனும் அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.    இவற்றை பறிமுதல் செய்வதற்கு என 824 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புகார் கிடைத்த அடுத்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  பறக்கும் படையினர் இன்று வரை நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்புக்கு பணம், போதைப்பொருள், பரிசுப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதில் ரூ.9.62 கோடி ரொக்கம்
42.14 கோடி ரூபாய் மதிப்பு மதுபானம்(9.6 லட்சம் லிட்டர்)
24.61 கோடி மதிப்பு போதை மருந்து
5.8 கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள்
ரூ.26 கோடி மதிப்பு இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.     தேர்தல் தொடர்பான பிரச்னைகளை தெரிவிக்க 1950 என்ற எண் மூலம் தகவல் மையத்தை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

