தமிழக மீனவர்களுக்கு பா.ஜ., அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும்: நிர்மலா சீதாராமன் உறுதி
தமிழக மீனவர்களுக்கு பா.ஜ., அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும்: நிர்மலா சீதாராமன் உறுதி
UPDATED : அக் 19, 2025 10:28 PM
ADDED : அக் 19, 2025 10:27 PM

சென்னை : 'தமிழக மீனவர்களுக்கு, மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளையை சேர்ந்த மீனவர்கள், கடலில் சிக்கி தவிப்பது குறித்த தகவலை கூறி, அவர்களை மீட்கும்படி, தமிழக பா.ஜ., மீனவர் பிரிவு அமைப்பாளர் சீமா கோரினார். இதையடுத்து ,வல்லவிளை கிராமத்தில் உள்ள, புனித மேரி தேவாலயத்தின் பாதிரியார் தாமசுடன், எனது அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது, 'ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் பல மீனவர்களின் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு செயலிழந்து உள்ளது' என, அவர் கூறினார். அந்த பகுதியில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, மீனவர்கள், பாதுகாப்பாக கரைக்கு திரும்ப, வழிகாட்டும் வகையில், செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை, மீண்டும் செயல்படுத்தி தர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பி.எஸ்.என்.எல். செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை பயன்படுத்தவில்லை என்றாலும், தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, இணைப்பை தற்காலிகமாக மீட்டெடுக்கும் பணியில், மத்திய தகவல் தொடர்பு துறை மற்றும் பி.எஸ்.என்.எல், ஈடுபட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, தமிழக மீனவர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும், எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுவதோடு, தேவையான காலத்தில், அவர்களுடன் உறுதுணையாக நிற்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.