/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.7.50 லட்சம் கஞ்சா அம்பத்துாரில் சிக்கியது
/
ரூ.7.50 லட்சம் கஞ்சா அம்பத்துாரில் சிக்கியது
ADDED : அக் 19, 2025 10:26 PM

அம்பத்துார்: அம்பத்துாரில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா சிக்கியது.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு, நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், அம்பத்துார், சூரப்பட்டு அருகே உள்ள சுங்கச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் வந்த இருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனை செய்தனர்.
இதில், அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரிந்தது. போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், குன்றத்துாரைச் சேர்ந்த திலீப் குமார், 34 மற்றும் விக்னேஷ், 25, என தெரிந்தது.
இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி, சென்னை புறவழிச்சாலையில் அம்பத்துார் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து பேருந்து வாயிலாக தென் மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்தது தெரிந்தது.
இருவரிடம் இருந்தும், 7.50 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை சிறையில் அடைத்தனர். கைதான இருவர் மீதும், குன்றத்துார் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.