பலுாசிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; போக்குவரத்து பாதிப்பு, முழு ஊரடங்கு
பலுாசிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்; போக்குவரத்து பாதிப்பு, முழு ஊரடங்கு
ADDED : ஆக 24, 2026 09:44 PM

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பலுாச் விடுதலைப் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில், பாலங்கள், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுாசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, அந்த மாகாணத்தைச் சேர்ந்த, பலுாச் விடுதலைப் படை என்ற அமைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அரசுக்கு எதிராக, தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மாஸ்டுங் பகுதியில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்து பல இணைப்பு பாலங்கள் முழுமையாக சேதமடைந்தன.
மேலும் குவெட்டா மற்றும் கராச்சியை இணைக்கும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினருக்கும், பலுாச் விடுதலைப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பல மணிநேரமாக முடங்கியது.
பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு காத்கோச்சா மற்றும் மாஸ்டுங் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
