மூளையை தின்னும் அமீபா; கேரளாவில் மேலும் ஒருவர் பலி
மூளையை தின்னும் அமீபா; கேரளாவில் மேலும் ஒருவர் பலி
ADDED : செப் 07, 2025 02:51 AM

வயநாடு: மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு, கேரளாவில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளது.
மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மாசுபட்ட நீரில் குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் வாயிலாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்ற அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் வயநாட்டின் சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதேஷ், 45, என்ற நபர் கடந்த 20 நாட்களாக கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு இதய பாதிப்பும் இருந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில் ரதேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த மாதம் மட்டும், அமீபிக் மூளை காய்ச்சல் தாக்கி மூன்று பேர் பலியாகினர். ரத்தேஷையும் சேர்த்து பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
மேலும் 11 பேர் கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஆண்டு மட்டும், 42 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.