ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : நவ 26, 2025 06:10 PM

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 7,280 கோடி ரூபாயில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிய வகை காந்த உற்பத்தி செய்யப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: இது மிகவும் முக்கியமான ராஜதந்திர முடிவு. இந்த திட்டத்துக்கு 7,280 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.
இந்த அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி தயார் செய்யப்படும் காந்தம், மின்சார வாகனங்கள், விமானங்கள், மின்சாதனங்கள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏல முறை மூலம் 5 நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஆண்டுதோறும் 1,200 மெட்ரிக் டன் காந்த உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படும். 7 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

