செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணையசேவை துண்டிப்பு
செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணையசேவை துண்டிப்பு
ADDED : செப் 08, 2025 01:16 AM

துபாய்: செங்கடலில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதமடைந்ததை அடுத்து, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று முடங்கியது.
ஆப்ரிக்க - ஆசிய நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலில், ஏமன் நாட்டை ஒட்டி செங்கடல் பகுதி அமைந்துள்ளது.
தெ ன்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான நான்கு இணையதள கேபிள்கள், செங்கடலின் ஆழமான பகுதிகளி ல் பதிக்கப்பட்டுள்ளன.
'அதேபோல், 'அல்காடெல் - லுசென்ட்' நிறுவனம் சார்பிலும் இணையதள சேவைகள் செங்கடல் அடியில் செல்கின்றன.
இந்த கேபிள்கள் சேதமடை ந்ததை அடுத்து, ஆசிய நாடுகளில் இணையதள சேவை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த பாதிப்பு உணரப்பட்டது.
இது குறித்து இணையதள சேவை யை நிர்வகித்து வரும், 'நெட்பிளாக்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'செங்கடல் பகுதியில் கடலுக்கடியில் புதைக்கப்பட்டிருந்த இணையதள கேபிள்கள் சேதமடைந்ததால், ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டது. இது ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள சேவை தடை குறித்து 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடலுக்கடியில் கேபிள்களில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் தேவைப்படும்' என தெரிவித்தது.
'இஸ்ரேல் - ஹமாஸ் போரில், ஹமாசுக்கு ஆதரவாக ஏமனை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
'செங்கடல் பகுதியில், இஸ்ரேல் கொடியுடன் வரும் சரக்கு கப்பலை குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலின் போது, இணையதள கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம்' என கூறப்படுகிறது.
கேபிள்கள் சேதமடைந்ததற்கு தாங்கள் காரணமில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வர்த்தகக் கப்பல்கள் வீசும் நங்கூரங்களால் கேபிள்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம், செங்கடல் பகுதியில் நிலவும் மோதல்களால், முக்கியமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.