தமிழக அரசின் சோதனையில் குறைபாடுl ஓராண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி.,
தமிழக அரசின் சோதனையில் குறைபாடுl ஓராண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி.,
ADDED : அக் 11, 2025 04:07 AM

புதுடில்லி : 'தமிழகத்தில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் முறையாக சோதனை நடத்தப்படவில்லை' என, ஓராண்டுக்கு முன்பே சி.ஏ.ஜி., எனப்படும், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை எச்சரித்தது தற்போது தெரியவந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சளி, காய்ச்சலுக்கு கடந்த மாதம் சிகிச்சை பெற்று வந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்திலும், மூன்று குழந்தைகள் இதேபோல் இறந்தனர். இதையடுத்து, இறந்த குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்த திசுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், 'கோல்ட்ரிப், நெக்ஸ்ட்ரா' ஆகிய இருமல் மருந்து குடித்ததால், உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை பரிந்துரைத்த ம.பி., டாக்டர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டனர்.
இருமல் மருந்தை தயாரித்த காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த 'ஸ்ரீசன் பார்மா' உரிமையாளர் ரங்கநாதனை, ம.பி., போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், 'தமிழக அரசின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் உரிய அளவில் சோதனை நடத்தவில்லை' என, தலைமை கணக்கு தணிக்கையாளர் அதிகாரிகள் கடந்தாண்டே எச்சரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான செயல்திறன் தணிக்கை அறிக்கையை தமிழக அரசுக்கு, தலைமை கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் கடந்தாண்டு ஆக., 1ல் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2016 - 17 மற்றும் 2020 - 21ம் ஆண்டுகளுக்கு இடையே, நாடு முழுதும் மருந்து ஆய்வாளர்கள் தங்கள் இலக்குகளை அடைய தவறிவிட்டனர்.
ஆய்வு செய்வதில் 'கோட்டை' l 2016 - 17ம் ஆண்டில் இலக்காக வைக்கப்பட்ட 1,00,800 ஆய்வுகளில், 66,331 மட்டுமே முடிக்கப்பட்டன. இது, 34 சதவீத பற்றாக் குறையை காட்டுகிறது.
l 2017 - 18ம் ஆண்டில், 1,00,800 இலக்குகளில், 60,495 ஆய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. இது, 40 சதவீத இடைவெளியை குறிக்கிறது.
l 2018 - 19ம் ஆண்டில், இலக்கு வைக்கப்பட்ட 98,280ல், 59,682 ஆய்வுகளே நடத்தப்பட்டன. இது, 39 சதவீதம் பற்றாக்குறையாகும்.
l 2019 - 20ல் நிர்ணயிக்கப்பட்ட 1,03,500 இலக்குகளில், 62,275 ஆய்வுகளே முடிக்கப்பட்டன. இது, 40 சதவீத பற்றாக்குறையை ஏற்படுத்திஉள்ளது.
l 2020 - 21ம் ஆண்டில், 1,00,800 இலக்குகளில், 62,358 ஆய்வுகள் நடத்தப்பட்டதால், 38 சதவீத பற்றாக்குறை ஏற்பட்டது.
மாதிரி சேகரிப்பிலும் 'கோட்டை' அதேபோல், 2016 முதல் 2021 வரை, மருந்து ஆய்வாளர்கள் சோதனைக்காக மாதிரிகள் சேகரிப்பதற்கான இலக்குகளையும் அடைய தவறிவிட்டனர்.
l 2016 - 17ல் எடுக்கப்பட வேண்டிய 17,280 மாதிரிகளில், 9,561 மட்டுமே சேகரிக்கப்பட்டன. இது, 45 சதவீதம் குறைவு.
l 2017 - 18ம் ஆண்டில், 17,280 இலக்கில், 8,908 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டன. இது, 48 சதவீதம் குறைவு.
l 2018 - 19ம் நிதியாண்டில், 19,656 இலக்குகளில், 8,988 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 54 சதவீதம் குறைவாக இருந்தது.
l 2019 - 20ல், 19,320 மாதிரிகளில், 9,011 மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதனால், 53 சதவீத இடைவெளி ஏற்பட்டது.
l 2020 - 21ம் ஆண்டில், 18,816 மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 8,604 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் விளைவாக, 54 சதவீத பற்றாக்குறை நிலவியது.
நாடு முழுதும் மருந்து கட்டுப்பாட்டு துறையில் மனிதவள பற்றாக்குறை நிலவுகிறது. அனுமதிக்கப்பட்ட 488 பணியிடங்களில், 344 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 32 சதவீதம் காலியாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களின் பொது சுகாதார உள்கட்டமைப்பை ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்தாண்டு டிச., 10ல் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள பலவீனங்கள் உட்பட தொடர்ச்சியான குறைபாடுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
'மருந்து ஆய்வு தொடர்பான கடுமையான தரவுகளை ஆராய்ந்து செயல்பட்டிருந்தால், தமிழகத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்ததை தவிர்த்திருக்கலாம்' என, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.