தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் ஆவேசம்
தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பிரசாரம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் ஆவேசம்
UPDATED : டிச 22, 2025 07:24 AM
ADDED : டிச 22, 2025 03:50 AM

மதுரை: ''2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடும் பிரசாரம் மேற்கொள்வேன்,''என, மதுரையில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றக் கோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும் டிச., 18ல் மதுரையை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து இறந்தார். நரிமேட்டில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் நேற்று ஆறுதல் தெரிவித்தார்.
பின் அவர் கூறியதாவது: பூர்ணசந்திரனை தற்கொலைக்கு துாண்டியதில் முக்கிய பங்கு முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு. தன் குடும்பமே தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் என இறப்பதற்கு முன் பூர்ணசந்திரனே தெரிவித்துள்ளார். பொதுநலத்திற்காக தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் யார் இறந்தாலும் அவர்கள் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சிறந்த ஆன்மிகவாதி
பூர்ணசந்திரன் இறப்பை கொச்சைப்படுத்தி, களங்கம் ஏற்படுத்துபவர்கள் கீழ்த்தரமான பிறவிகள். அவர் தி.மு.க.,வை சேர்ந்தவரானாலும் சிறந்த ஆன்மிகவாதி. தன் குழந்தைகளுக்கு கடவுள், தீபம் உள்ளிட்ட படங்களை வரைந்து ஆன்மிக உணர்வை வளர்த்துள்ளார். முருகனுக்கு தீபம் ஏற்றவில்லையே என உயிரையே தியாகம் செய்துள்ளார்.
அவரது வீட்டிற்கு ஹிந்துக்கள் அனைவரும் ஒருமுறையாவது வர வேண்டும். நான் எந்தக் கட்சி சார்பிலும் இங்கு வரவில்லை. இனி மதுரைக்கு வந்தால் இங்கு வராமல் செல்ல மாட்டேன். அவரது காரிய நாளன்று மதுரையே குலுங்கும் அளவுக்கு முருக பக்தர்கள் அவரது வீட்டுக்கு வரவேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய செயல்தலைவர் நிதின்நபின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என அனைவரும் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும்.
தமிழக அரசுக்கு வரியாக ஆண்டுதோறும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் கோடி கொடுக்கிறோம். அதில் ரூ. 120 கோடியை கையாடல் செய்து வசதியை பெருக்கிக் கொள்கின்றனர்.
பூர்ணசந்திரனின் 2 குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நிதி திரட்டுவேன். குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, திரட்டும் நிதியை வைப்புத் தொகையாக செலுத்துவேன். அதில் ஒரு பைசா கூட யாரும் தொட முடியாதபடி செய்வேன்.
கைதிகளாக போலீசார்
கமிஷனராக இருந்திருந்தால் காவல்துறையில் தி.மு.க., அ.தி.மு.க., என 2 பிரிவாக உள்ளனர். கமிஷனர் இடத்தில் நான் இருந்திருந்தால், ''நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல'' என நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன்.
உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும் அவரது நேர்மையான பணிக்கு அவருக்கு ஆதரவாக 2, ஆயிரம் கையெழுத்து என்றாலும் போடுவேன். அவர் எனக்கு துரோகம் செய்தாலும், நான் அவருக்கு நல்லது செய்வேன்.
சிவகங்கை சமஸ்தானம் வேலு நாச்சியாரின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என பூர்ணசந்திரன் குடும்பத்தினர் கூறுகின்றனர். வேலு நாச்சியாரின் படத்தை போட்டுக்கொண்டு ஓட்டுக்காக வந்து நிற்கிறான் ஒரு புது பையன். இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை. இத்தகைய சூழலில் அவரது குடும்பத்திற்காக நிற்க வேண்டாமா.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தலா ரூ.10 லட்சம் கொடுக்கிறார். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் சார்பில் ஒருவர் கூட ஆறுதல் கூற வரவில்லை. ஓட்டு வங்கிக்காக செயல்படும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் கடும் பிரசாரம் செய்வேன் என்றார். ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் உடனிருந்தார்.

