'பால்டாயில் பாய்' நம்மை பேசலாமா?: உதயநிதி மீது இபிஎஸ்., கடும் தாக்கு
'பால்டாயில் பாய்' நம்மை பேசலாமா?: உதயநிதி மீது இபிஎஸ்., கடும் தாக்கு
UPDATED : அக் 12, 2025 12:55 AM
ADDED : அக் 12, 2025 12:42 AM

ஈரோடு: ''உதயநிதிக்கு என்ன உழைப்பு இருக்கிறது. 'பால்டாயில் பாய்' நம்மை பேசுகிறார். என்ன செய்வது?, '' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், 'நடந்தாய் வாழி காவிரி திட்டம்' குறித்து பேசியபோது என்னை கிண்டல், கேலி செய்தனர். அந்த திட்டத்தை, தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை.
ஆனால், அ.தி.மு.க., கொடுத்த அழுத்தம் காரணமாக, மத்திய அரசு, 12,500 கோடி ரூபாய் இந்தாண்டு கொடுக்க உள்ளது.
டி.ஜி.பி.,யை நியமிக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் வரும் வரை காத்திருப்பதால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அ.தி.மு.க., அலுவலகத்தை, ஒருவர் வாயிலாக அடித்து நொறுக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டம் போட்டார். யார் நினைத்தாலும், அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது.
துணை முதல்வர் உதயநிதிக்கு உழைப்பு என எதுவுமே கிடையாது. அவர் என்ன உழைத்தார்? ஆனால், அந்த 'பால்டாயில் பாய்' நம்மை பற்றி, கேவலமாக பேசி வருகிறார்.
எமர்ஜென்சி, மிசா காலங்களில் கொடுமையை அனுபவித்ததாக ஸ்டாலின் கூறுகிறார். பிறகு, ஏன், எமர்ஜென்சியை கொண்டு வந்த, காங்., உடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்?
ஸ்டாலின் முதல்வரான பின், அரிசி, மளிகை உட்பட அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. தமிழகத்தில் 65 சதவீதம் பேர் சாமான்ய மக்கள். அவர்களின் யதார்த்த நிலையை உணராத, திறமையற்ற பொம்மை முதல்வர், தமிழகத்தை ஆள்கிறார்.
பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்ததால், தி.மு.க., பயப்படுகிறது. தற்போது, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., - கம்யூ.,க்கள் - வி.சி., கட்சியினரும் பதறுகின்றனர். தோல்வி பயத்தால், எதை பேசுவது என தெரியாமல் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சி தலைவர்களும் பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.