/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை காங்கயம் மயிலைக்கு 'மவுசு'
/
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை காங்கயம் மயிலைக்கு 'மவுசு'
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை காங்கயம் மயிலைக்கு 'மவுசு'
ரேக்ளா காளை ரூ. 30 லட்சத்துக்கு விற்பனை காங்கயம் மயிலைக்கு 'மவுசு'
ADDED : அக் 12, 2025 12:39 AM

உடுமலை:உடுமலை அருகே, மருள்பட்டியில், ரேக்ளா பந்தயத்துக்கு பயன்படும் காங்கேயம் இன காளை, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, ரூ.30 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் ரேக்ளா பந்தயத்துக்காக அதிகளவு காங்கேயம் இன காளைகள் வளர்த்து வருகின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவு ரேக்ளா பந்தயங்களில் இந்த காளைகள் பங்கேற்கின்றன.
உடுமலை அருகேயுள்ள மருள்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஹரிவீரராகவன், காளைகள் வளர்த்து, ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், பொள்ளாச்சி நெகமம், செட்டிக்காபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில், குறைந்த நேரத்தில் இலக்கை கடந்து, முதல் பரிசை வென்ற, காங்கேயம் இனத்தை சேர்ந்த மயிலை காளை, உச்ச விலையாக, ரூ. 30 லட்சத்து, 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரேக்ளா பந்தய காளை ஒன்று, அதிகபட்சமாக, ரூ.22 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது உடுமலை காளை, அதிகவிலைக்கு விற்பனையானது. நெகமம் செட்டிக்காபாளையத்தை சேர்ந்த விவசாயி ராஜா இந்த காளையை வாங்கியுள்ளார்.
ரேக்ளா பந்தய வரலாற்றில், அதிக விலைக்கு உடுமலை காளை விற்பனையாகியுள்ளது, என விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஹரிவீரராகவன் கூறியதாவது:
நாட்டு மாடுகளை காக்க வேண்டும் என்ற நோக்கில், காங்கேயம் இன காளைகள், மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரேக்ளா பந்தயங்கள் நடக்கிறது.
சில நாட்களுக்கு முன், நெகமம் செட்டிக்காபாளையம் பகுதியில் நடந்த, மாநில அளவிலான ரேக்ளா பந்தயத்தில், மயிலை காளை, 200 மீட்டர் பந்தய துாரத்தை, 16.125 வினாடிகளில் கடந்து, அபார வெற்றி பெற்று, முதல் பரிசை பெற்று தந்தது.
இதனால், இந்த காளை அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. மூன்று வயதான இக்காளை, 4 பல் பிரிவில், 25க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, முதலிடம் பெற்று, ஸ்கூட்டர், பைக் போன்ற பரிசுகளை பெற்றுத்தந்தது.
இவ்வாறு, கூறினார்.