'பிளாக்மெயில்' செய்ய முடியாது: சவுக்கு சங்கருக்கு கோர்ட் எச்சரிக்கை
'பிளாக்மெயில்' செய்ய முடியாது: சவுக்கு சங்கருக்கு கோர்ட் எச்சரிக்கை
ADDED : ஜன 20, 2026 02:21 AM

சென்னை: 'நீதிமன்றத்தை 'பிளாக்மெயில்' செய்து பணிய வைக்க முடியாது' என, சவுக்கு சங்கர் தரப்பிடம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு, ஜாமின் வழங்கக் கோரி, அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சங்கருக்கு மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, கடந்த டிச., 27ல் உத்தரவிட்டனர்.
இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'ஜாமினை ரத்து செய்ய கோரும் மனுவை, இந்த அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்தால், பாரபட்சம் காட்டப்படலாம்' என, அஞ்சுவதாகக் கூறி, சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், ''நீதிபதிகளை தேர்ந்தெடுத்து வழக்கை நடத்த முடியாது. இது போன்ற மனுக்களை விசாரணைக்கு ஏற்க மாட்டேன்,'' என, தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற, தலைமை நீதிபதியை அணுகி, நிர்வாக உத்தரவுகளை பெறுவது, மனுதாரர் தரப்பின் பொறுப்பு. இந்த வழக்கு என்னிடம் இருக்கும் வரை, நான் சட்டப்படிதான் தீர்ப்பளிப்பேன். நீதிமன்றத்தை 'பிளாக்மெயில்' செய்து பணிய வைக்க முடியாது.
தனி நபர்கள் குறித்து, நாங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. நீதித்துறை மீது மட்டுமே அக்கறை கொண்டுள்ளோம். தனி நபர்களின் முகத்தை பார்ப்பதில்லை. நீதித்துறை வாழ்க்கையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளேன். எந்த வழக்கையும் விசாரிப்பதில் இருந்து விலகியதில்லை. இந்த வழக்கிலிருந்தும் விலக மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, 'தலைமை நீதிபதியிடமிருந்து நிர்வாக உத்தரவுகளைப் பெற்றால், இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம். 'இல்லையெனில், இந்த மனுவுக்கு பதில் அளித்தாலும், இல்லை என்றாலும், வழக்கின் தகுதி அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்' என, சங்கர் தரப்புக்கு கூறி, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

