இன்ஜி., கல்லுாரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
இன்ஜி., கல்லுாரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2025 12:14 AM

சென்னை: பொறியியல் கல்லுாரி களுக்கு விதிகளை மீறி முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் 10 பேர், பேராசிரியர்கள் மூன்று பேர் மற்றும் நான்கு கல்லுாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலையின் கீழ், 480 பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 224 தனியார் பொறியியல் கல்லுாரிகளில் பணியாற்றும் 353 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணிபுரிவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், விதி முறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்று, பொறியியல் கல்லுாரிகளுக்கு, பல்கலை அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதிகாரிகள் உடந்தை இது தொடர்பாக விசாரணை நடத்த அண்ணா பல்கலை தரப்பில், மூன்று பேர் குழு நியமிக்கப்பட்டது. இக்குழு பொறியியல் கல்லுாரிகளில் ஆய்வு செய்த போது, எஸ்.மாரிச்சாமி என்ற பேராசிரியர், 11 கல்லுாரிகளில் பணிபுரிவதாக ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பது தெரியவந்தது.
அத்துடன் விசாரணை குழு, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு கல்லுாரிகளை ஆய்வு செய்த போது, ரவிகுமார் என்ற பேராசிரியர், இரு கல்லுாரிகளிலும் பணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
இந்த முறைகேடுகளுக்கு, அண்ணா பல்கலை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும், உரிய ஆய்வு நடைமுறைகளை பின்பற்றாததே காரணம் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பொறியியல் கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்ட விசாரணை குழு, அவர்களிடம் விசாரணையும் நடத்தியது.
இந்நிலையில், விதி முறைகளை பின்பற்றாமல், லஞ்சம் பெற்று, பொறியியல் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக, அண்ணா பல்கலை அதிகாரிகள் 10 பேர் மீதும், முறைகேட்டில் ஈடுபட்டதாக மூன்று பேராசிரியர்கள் மற்றும் நான்கு கல்லுாரிகள் மீதும், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதில், அண்ணா பல்கலையில் அங்கீகாரம் வழங்கும் பிரிவின் முன்னாள் இயக்குநரும், தற்போது நாகாலாந்து என்.ஐ.டி. இயக்குநராக பணியாற்றுபவரான ஏ.இளையபெருமாள், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்கு கல்லுாரிகள் மேலும், அண்ணா பல்கலை அங்கீகார பிரி வின் துணை இயக்குநர்கள் எம்.சித்ரா, ஷைலோ எலிசபெத், முன்னாள் பதிவாளர் ஜி.ரவிகுமார், தற்போதைய பொறுப்பு பதிவாளர் ஜெ.பிரகாஷ், தற்போதைய அங்கீகார பிரிவு இயக்குநர் வி.ஆர்.கிரிதேவ்...
பல்கலையின் கோவை இயக்குநர் எஸ்.மார்ஷல் அந்தோணி, மதுரை துணை இயக்குநர் வி.மாலதி, திருச்சி துணை இயக்குநர் எஸ்.பிரகதீஸ்வரன், திருநெல்வேலி துணை இயக்குநர் சிலஸ் சர்குணம் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் பணிபுரிந்து மோசடியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் எஸ்.மாரிச்சாமி, எஸ்.கண்ணன், ஒய்.ரவிகுமார் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட திருவள்ளூர் பிரதியுஷா பொறியியல் கல்லுாரி...
திருவள்ளூர் ஸ்ரீ வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லுாரி, காஞ்சிபுரம் மாதா பொறியியல் கல்லுாரி, கோவை கதிர் பொறியியல் கல்லுாரி மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இவர்களுடன் பெயர் குறிப்பிடாத அரசு அதிகாரிகள் மற்றும் பொறியியல் கல்லுாரிகள் மீது குற்றச்சதி, அரசு ஊழியரால் நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் வாயிலாக, அங்கீகாரம் பெற தகுதி இல்லாத கல்லுாரிகளுக்கு அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கி உள்ளனர்.
இது, மாணவ - மாணவியரின் கல்வித் தரத்தை நேரடியாக பாதித்துள்ளது, மொத்தமுள்ள பொறியியல் கல்லுாரிகளில், 47 சதவீத கல்லுாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளன.

