ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
ADDED : அக் 10, 2025 11:48 PM

புதுடில்லி :ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து, ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, சட்டப்பிரிவு 370ஐ, 2019 ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
கடந்த 2023 டிசம்பரில், இது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2024 செப்டம்பருக்குள் ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்தவும், மாநில அந்தஸ்தை விரைவில் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, கடந்தாண்டு செப்டம்பரில் ஜம்மு - காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா முதல்வர் ஆனார்.
இந்நிலையில், ஜம்மு - -காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்குவதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது குறித்து ஜம்மு- - காஷ்மீர் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது ஒரு தனித்துவமான பிரச்னை. வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், பல காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.
இதை பதிவு செய்த அமர்வு, இது தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.