தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி ரூ.13 கோடி எம்.சி.டி., ஒதுக்கீடு
தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி ரூ.13 கோடி எம்.சி.டி., ஒதுக்கீடு
ADDED : அக் 10, 2025 10:54 PM
புதுடில்லி:தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட, 13 கோடி ரூபாயை ஒதுக்கி, டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் எனும், எம்.சி.டி., உத்தரவு வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த நிலைக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், பசு பாதுகாப்பகங்கள் மற்றும் குரங்குகள் பாதுகாப்பு மையங்களை அமைக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய, பா.ஜ., கவுன்சிலர் ராஜ்பால் சிங்,''இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்ய அனைத்து அதிகாரிகளும் முன் வர வேண்டும். அரசு நிதி எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.
கடந்த வாரம், கென்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் விளையாட்டு பயிற்சியாளர்களை தெரு நாய்கள் கடித்ததில் அவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின், ஆகஸ்ட் 22ம் தேதி அந்த உத்தரவு, மூன்று நீதிபதிகள் உத்தரவால் மாற்றப்பட்டது. தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் இடங்களை எம்.சி.டி., தெரிவிக்க, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.