அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு
அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு
ADDED : அக் 10, 2025 10:55 PM
புதுடில்லி:ரிஷிகேஷ், ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கு, எலக்ட்ரிக் பஸ்களை இயக்க, டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பயணியருக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில், பசுமை பயணத்தை அளிக்க ஏதுவாக, டில்லி மாநில அரசு, அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது .
இதற்கான அறிவிப்பை, நேற்று முன்தினம் வெளியிட்ட டில்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் சிங்,''எந்தெந்த ஊர்களில் எலக்ட்ரானிக் பஸ்களுக்கு, 'ரீசார்ஜிங்' வசதிகள் உள்ளனவோ, அந்த நகரங்களுக்கு டில்லியில் இருந்து எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.
முதற்கட்டமாக, ஆல்வார், ஜெய்ப்பூர், பட்டியாலா, சண்டிகர், அமிர்தசரஸ், கத்ரா, சிம்லா, ஹால்ட்வானி, பரேலி மற்றும் லக்னோ நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, டில்லி - ரிஷிகேஷ், டில்லி - டேராடூன், டில்லி - ஹரித்வார், டில்லி - ஆக்ரா, டில்லி - மொராதாபாத், டில்லி - யமுனாநகர் போன்ற நகரங்களுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.