மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மாற்றம்! 100 நாட்கள் வேலையை 125 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மாற்றம்! 100 நாட்கள் வேலையை 125 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு
ADDED : டிச 16, 2025 01:03 AM

புதுடில்லி: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் கொண்டு வரப்படவுள்ள இச்சட்டத்தில், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் - 2025' என்ற பெயரில் இச்சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கம். மேலும், 100 நாட்கள் வேலையை 125 நாட்களாக உயர்த்தவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது .
புதிய சட்டம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுஹான் நேற்று கூறியதாவது: மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டங்கள் பரவலாக மக்களை சென்றடைகின்றன. இதனால், அரசின் திட்டங்களும் முழுதாக அமலாகின்றன.
அதே சமயம், கிராமப்புறங்களில் தற்போதைய சமூக பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இந்த திட்டத்தை தகவமைப்பது அவசியம். வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போது உள்ள சட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால், புதிய சட்டம், அதிகாரமளித்தல், வளர்ச்சி, கிராமப்புறங்களை வளமாக்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டது.
நீர் தொடர்பான பணிகள் மூலம் நீர் பாதுகாப்பை உறுதி செய்வது, ஒட்டுமொத்த கிராமத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்புகளை பெருக்குதல் மற்றும் மோசமான வானிலைகளை சமாளிப்பதற்கான சிறப்பு பணிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறப்பம்சங்கள்
* புதிய சட்டத்தின்படி, 100 நாட்கள் வேலை என்பது 125 நாட்களாக உயரும்
* வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயிக்கும்
* அந்த ஊதியம் இதற்கு முன் வழங்கப்பட்டதை விட குறைவாக இருக்காது
* வாரந்தோறும் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படும்
* 15 நாட்களுக்குள் வேலை வழங்காவிட்டால், அதற்கான படி தொகையை மாநில அரசுகளே வழங்க வேண்டும்
* விதைப்பு, நடவு மற்றும் அறுவடை காலங்களில் விவசாய பணியாட்களை, வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்ற அழைக்கக் கூடாது
* வேளாண் பருவ காலங்களில், விவசாய பணியாட்கள் போதிய அளவுக்கு கிடைப்பதை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை
* பயோமெட்ரிக் அங்கீகாரம் உள்பட விரிவான டிஜிட்டல் முறையில் வேலை திட்டம்
* ஜி.பி.எஸ்., அல்லது மொபைல் போன் வழியாக பணியிடத்தை மேற்பார்வையிடுதல்
* நிகழ்நேர மேலாண்மை தகவல் முறை வழங்கப்படும்
* மோசடிகளை தடுக்க ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்
* மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டம் செயல்படும். இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் வேலைவாய்ப்புகளை வழங்க திட்டங்களை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும்
* இதற்கு முன், 90 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியது. இனி, 60 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்
* புதிய சட்டம் அமலான ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை மாநில அரசுகள் முடிக்க வேண்டும்
* அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும்
* ஒப்புதலான தொகையை விட கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டால், அதற்கான செலவுகளை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.

