UPDATED : நவ 10, 2025 03:46 PM
ADDED : நவ 10, 2025 03:20 PM

புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராத போது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதி மவுஷூமி பட்டாச்சார்யா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பெடி ராஜூ என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கவாய் முன்பு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, ' ராஜூ மன்னிப்பு கேட்டதாகவும், இதனை தெலுங்கானா நீதிபதி ஏற்றுக் கொண்டார்', எனவும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி கவாய் கூறியதாவது: சமீப நாட்களாக ஒரு நீதிபதி சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்காத போது, அவருக்கு எதிரான அவதூறான குற்றச்சாட்டுகளை கூறும் போக்கு அதிகரித்துள்ளதை நாங்கள் கவனித்து வருகிறோம். இது போன்ற நடைமுறைகள் கடுமையான கண்டனத்துக்கு உரியவை. இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகளாக நீதிமன்றத்திற்கு கடமைப்பட்டுள்ளனர். சட்டத்தின் மகத்துவம் தண்டனையில் இல்லை. மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பதில் உள்ளது. மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஐகோர்ட் நீதிபதி மன்னிப்பை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை.இருப்பினும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்பிங் வீடியோ
இந்திய நீதித்துறையில் ஏஐ பயன்படுத்துவதற்கு விதிமுறைகள் அல்லது கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை தலைமை நீதிபதி கவாய் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்றத்திலும் ஏஐ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதில் உள்ள தீமைகள் குறித்து விளக்கிய போது கவாய் கூறுகையில், 'அது குறித்து நாங்கள் அறிவோம். எங்கள் குறித்த மார்பிங் வீடியோ ஆன்லைனில் வந்ததை நாங்களும் பார்த்தோம் ' எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

