சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் : முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் : முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
UPDATED : செப் 04, 2025 04:08 PM
ADDED : செப் 04, 2025 04:00 PM

சென்னை : சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை கண்டெடுத்த தூய்மைப் பணியாளர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ' எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம் தான் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு ' எனக்கூறியுள்ளார்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கச்சங்கிலி கீழே கிடப்பதை கண்டார். இதனை கண்டெடுத்த அவர், தனது கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதனை போலீசிலும் ஒப்படைத்தார். கிளாராவின் நேர்மையை போலீசார், சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர். பொது மக்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு போலீசாரிடம் கிளாரா ஒப்படைத்த செய்தியை பார்த்து நெகிழ்ந்தேன்.
எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.