இன்று விடுமுறை எடுத்தால் ஊதியம் 'கட்' அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை
இன்று விடுமுறை எடுத்தால் ஊதியம் 'கட்' அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் எச்சரிக்கை
ADDED : நவ 18, 2025 03:42 AM

சென்னை : 'தமிழக அரசு ஊழியர்கள் இன்று விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்; துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்' என, தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆதரவு
ஆனால், அவற்றை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தலைமை செயலக சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்து
உள்ளன. இதேபோல, எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவ வினியோக பணியை புறக்கணிக்கப் போவதாக, வருவாய் துறை அலுவலர்கள் சங்கமும்
அறிவித்துள்ளது. இதனால், இன்று அரசு பணிகள் மட்டுமின்றி, எஸ்.ஐ.ஆர்., பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை
இந்நிலையில், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தற்செயல் விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும்; துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து துறை செயலர்கள், கலெக்டர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கையும் அனுப்பிஉள்ளார்.

