வரி விதிப்புக்கு சீனா கண்டனம்: அமெரிக்கா மீது பாய்ச்சல்
வரி விதிப்புக்கு சீனா கண்டனம்: அமெரிக்கா மீது பாய்ச்சல்
ADDED : அக் 12, 2025 11:45 PM

பீஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல், 100 சதவீத வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு என்று குற்றஞ்சாட்டியதுடன், இதை எதிர்த்து போராடுவதில், எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து, ஒவ்வொரு நாளும் உலக நாடுகளுக்கு ஒவ்வொரு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார்.
அதிரடி
இதன்படி, சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, நவ., 1ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும், 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனப் பொருட்களுக்கு, 30 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு அமலில் உள்ள நிலையில், தற்போது அறிவித்துள்ள வரிவிதிப்பால் 130 சதவீதமாக வரி உயர்வு அடைந்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு, சமீபத்தில் சீனா அறிவித்துள்ள அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
மின்னணுவியல், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செமி கண்டக்டர் போன்ற உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கு, இந்த அரிய கனிமங்கள் முக்கியமானது.
தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, சீனா கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அமெரிக்காவிற்கு முக்கிய பொருட்கள் தயாரிப்பதற்கான கனிமங்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என, டிரம்ப் நிர்வாகம் கருதியதால், இந்த கூடுதல் வரி விதிப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இரட்டை நிலை
டிரம்பின் இந்த அறிவிப்புக்கு சீன வர்த்தக அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
அமெரிக்கா, தன் தேச பாதுகாப்பு காரணங்களுக்காக வர்த்தக கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, சீனா அதேபோன்ற நடவடிக்கையை தன் சொந்த நாட்டிற்காக எடுத்தால் எதிர்க்கிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் இரட்டை நிலைப்பாட்டிற்கான ஒரு சிறந்த உதாரணம். வர்த்தக போரை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அதைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
பாதிப்பு
அடிக்கடி அதிக வரி விதிப்புகளை காட்டி மிரட்டுவது சரியான நடைமுறை அல்ல. இது இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுக்கான சூழலை கடுமையாக பாதித்துள்ளது.
மேலும், சீன நிறுவனங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்து, புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அமெரிக்கா தன் தவறான நடைமுறைகளைத் தொடர்ந்தால், சீனா தன் சட்டப்பூர்வ உரிமைகளையும், தேச நலன்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.