ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் சீன கம்யூ., கட்சியினர் சந்திப்பு
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளுடன் சீன கம்யூ., கட்சியினர் சந்திப்பு
ADDED : ஜன 14, 2026 02:05 AM

புதுடில்லி: டில்லி வந்துள்ள சீன கம்யூ., கட்சியின் உயர் மட்டக் குழுவினர், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசினர்.
நம் அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியா - சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
நான்கு ஆண்டுகளாக இரு தரப்பு உறவில் விரிசல் நிலவிய நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் சந்தித்து பேசியதை தொடர்ந்து நிலைமை சீரானது.
இந்நிலையில், சீனாவில் ஆளும் சீன கம்யூ., கட்சியின் உயர்மட்டக் குழுவினர், நம் நாட்டுக்கு வந்துள்ளனர். தலைநகர் டில்லியில், சீன அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான நிர்வாகிகள், பா.ஜ., தலைவர்ளை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து, டில்லியில் நேற்று, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளையும் அவர்கள் சந்தித்து பேசினர். ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்ட தலைவர்களை, சீன கம்யூ., கட்சியின் உயர்மட்டக் குழுவினர் சந்தித்து பேசினர். அரை மணி நேரம் நடந்த சந்திப்பில், அரசியல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நுாற்றாண்டுகளாக வெற்றிநடை போடும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு எப்படி செயல்படுகிறது; அதன் கட்டமைப்பு; வெற்றிக்கான ரகசியம் உள்ளிட்டவை குறித்து, சீன கம்யூ., குழுவினர் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
வழக்கமான உரையாடல்!
சீன கம்யூ., கட்சியின் நிர்வாகிகளை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. இது கட்சிகளுக்கு இடையிலான வழக்கமான உரையாடல்.
- விஜய் சவுதைவாலே, வெளிநாட்டு பிரிவு பொறுப்பாளர், பா.ஜ.,

ரகசிய ஒப்பந்தம்!
ஜம்மு - காஷ்மீரின் ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அங்கு கட்டுமான பணிகளும் நடக்கின்றன. லடாக்கை தொடர்ந்து, ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா நுழைந்தது எப்படி? அந்நாடு இப்படி துணிச்சலாக செயல்படும் நிலையில், கொஞ்சம் கூட வெட்கமின்றி, சீன கம்யூ., நிர்வாகிகளை பா.ஜ.,வினர் சந்தித்து பேசுகின்றனர். இது தேச விரோதம் இல்லையா? பா.ஜ., - சீனா இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது? இது குறித்து ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை?
- சுப்ரியா ஸ்ரீநாத், செய்தி தொடர்பாளர், காங்.,

