சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த சீனர் கைது
சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த சீனர் கைது
ADDED : டிச 08, 2025 01:23 PM

ஸ்ரீநகர்: சட்டவிரோதமாக ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்த சீனாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது; சீனாவைச் சேர்ந்த ஹூ காங்டை,29, என்பவர் கடந்த நவம்பர் 19ம் தேதி சுற்றுலா விசாவில் டில்லி வந்தார். வாரணாசி, ஆக்ரா, புதுடில்லி, ஜெய்ப்புர், சர்னாத், கயா மற்றும் குஷி நகர் போன்ற புத்த மத தலங்களை பார்வையிட மட்டுமே அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இவர் நவம்பர் 20ம் தேதி லே-வுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வருகைப் பதிவு குறிப்பேட்டில் பதிவு செய்யாமல், வெளியேறியுள்ளார்.
பின்னர், ஜான்ஸ்கர் பகுதியில் 3 நாட்கள் தங்கியிருந்து இமாலய மலையை ஒட்டியுள்ள இடங்கள் என பல பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். அதன்பிறகு டிசம்பர் 1ம் தேதி ஸ்ரீநகர் வந்துள்ளார். மேலும், உள்ளூரில் சட்டவிரோதமாக சிம்கார்டையும் வாங்கி பயன்படுத்தியுள்ளார். அவரது செல்போனை ஆய்வு செய்ததில், சிஆர்பிஎப் ராணுவ தளங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது கூகுளில் தேடியுள்ளார். மேலும், தெற்கு காஷ்மீரில் உள்ள ராணுவ தளங்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.
ஹூ காங்டை பாஸ்டன் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். முன்பு அமெரிக்கா, நியூசிலாந்து, பிரேசில், ஹாங் காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். விசா விதிமுறைகளை மீறியதால், அவரை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

