ஈரானின் தாக்குதலை தவிர்க்க சீன கப்பல் பெயரில் பயணம்
ஈரானின் தாக்குதலை தவிர்க்க சீன கப்பல் பெயரில் பயணம்
ADDED : மார் 09, 2026 05:16 AM

லண்டன்: மேற்கு ஆசியாவில் கச்சா எண் ணெய் கப்பல்கள் வெளியேறும் ஒரே கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், அந்நாட்டின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, 'சீன உரிமையாளர் கப்பல், சீன குழுவினர் உள்ள கப்பல்' என்ற பெயரில் பல்வேறு சரக்கு கப்பல்கள் செல்கின்றன.
அமெரிக்காவுடனான போரை அடுத்து, தங்கள் நாட்டை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்குகளுடன் 1,000க்கும் மேற்பட்ட கப்பல்கள் வளைகுடா கடல் பகுதியில் சிக்கியுள்ளன.
போரில் பயன்படுத்த ஆயுதங்கள் வழங்கி சீனா உதவியதால், அந்நாட்டிற்கு செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை மட்டும் தாக்க மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களை, 'சீன உரிமையாளர் உடையது' என்ற பெயரில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இயக்கி வருகின்றனர்.
இது குறித்து கப்பல் போக்குவரத்து தகவல்களை ஆய்வு செய்து வரும் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக சில கப்பல்கள், தங்களை சீனாவுடன் தொடர்புடையவை என்ற தகவலுடன் பயணிக்கின்றன.
கடந்த வாரத்தில், 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் தங்களது தானியங்கி கப்பல் அடையாள அமைப்பின் சிக்னல்களை சீனாவுடன் தொடர்புடையதாக மாற்றின. இதைத் தொடர்ந்து, 'சீன உரிமையாளர் கப்பல், சீன குழுவினர் பயணிக்கும் கப்பல், அனைத்து ஊழியர்களும் சீனர்கள்' என தகவல் கொண்ட பலகைகளை தாங்கிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

