எண்ணெய் உற்பத்தி நாடுகளின் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்த காலநிலை உச்சி மாநாடு
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்த காலநிலை உச்சி மாநாடு
ADDED : நவ 24, 2026 03:42 AM

அன்டால்யா: துருக்கியில், சி.ஓ.பி., - 31 எனப்படும் ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு, இரு வார காலம் நடந்தும், எந்தவொரு இறுதி அரசியல் ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இது, கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் அவற்றின் தலையீடே, ஒப்பந்தம் ஏற்படாததற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேற்காசிய நாடான துருக்கியின் அன்டால்யா நகரில், ஐ.நா., காலநிலை உச்சி மாநாடு கடந்த 9ல் தொடங்கி, 20ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எதிர்பார்ப்பு
இந்நிலையில், புதை படிவ எரிபொருட்கள் பயன்பாடு குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இரண்டு நாட்கள் நீடித்து கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் வாயிலாக, ஐ.நா., காலநிலை மாநாடுகளின் வரலாற்றிலேயே மிக நீண்ட நாட்கள் நடைபெற்ற மாநாடாக இது பதிவானது.
உச்சி மாநாட்டின் தொடக்கம் சுமுகமாகவே இருந்தது. முதல் நாளிலேயே எவ்வித ஆட்சேபனையும் இன்றி, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
முந்தைய ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் வழக்கமான, சுமுகமான ஒரு மாநாடாகவே இது அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாவது வாரம் நிலைமை தீவிரமடைந்து, முதலாவதாக வரைவு ஒப்பந்தத்தில் உலகளாவிய வெப்பநிலை உயர்வை, 1.5 டிகிரி செல்ஷியசுக்கு கீழே கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்பதும், அந்த வரம்பை தாண்டும் கட்டத்துக்குள் உலகம் நுழைந்து கொண்டிருக்கிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, காலநிலை மாற்றத்துக்கு மூலக் காரணமாக விளங்கக்கூடிய கச்சா எண்ணெய், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களை, எந்த ஒரு ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் தவிர்க்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடுகள் தீவிரமாக போராடின.
ஏமாற்றம்
இறுதியில், அவர்களே தங்கள் நோக்கத்தை அடைந்தனர். இதன்படி, 'குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை' நோக்கி நகர்வது போன்ற தெளிவற்ற முடிவுகள், இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன. எந்த ஒரு ஒப்பந்தத்திலும் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை குறைப்பது குறித்து தெரிவிக்காதது பற்றிய பல நாடுகளின் ஏமாற்றத்தை, 10வது நாளில் பனாமா நாட்டு பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர்.
மேலும், இதற்கு தீர்வு காணாத எந்த ஒரு ஒப்பந்தத்திலும் தாங்கள் கையெழுத்திடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் பசிபிக் தீவு நாடுகள் உட்பட 130 நாடுகள், மாநாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டன. இது, 2023 துபாய் மாநாட்டில் எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க உறுதிமொழியில் இருந்து பின்வாங்கும் செயல் என, அவை வாதிட்டன.
பழைய நிலை
ஐ.நா., விதிகளின்படி, அனைத்து நாடுகளின் ஒருமித்த ஆதரவு இறுதி தீர்மானத்துக்கு தேவை என்பதால், இவர்களின் எதிர்ப்பால் 'அன்டால்யா ஒப்பந்தம்' தோல்வியடைந்தது. கடந்த 2009ம் ஆண்டு கோபன்ஹேகன் மாநாட்டிற்கு பின், ஒரு காலநிலை மாநாடு இறுதி ஒப்பந்தமின்றி முடிவது, இதுவே முதல்முறையாகும்.
ஆனால், புதைபடிவ எரிபொருள் ஏற்றுமதி நாடுகளுக்கு, எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாதது ஒரு வெற்றியாக அமைந்துள்ளது. ஏனெனில், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான எந்தவொரு காலக்கெடுவும், கட்டுப்பாடும் இன்றி பழைய நிலையே தொடர்கிறது.
