ADDED : அக் 12, 2025 01:34 AM

சென்னை: சென்னை, கொளத்துாரில் கட்டப்பட்டுள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை, கொளத்துாரில் சி.எம்.டி.ஏ.,வின் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, வண்ணமீன் வர்த்தக மையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, பாடி மேம்பாலம் அருகில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இங்கு, 53 கோடி ரூபாயில் வண்ண மீன் வர்த்தக மையம் கட்ட, 2024 ஆக., 26ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் ஓராண்டில், இங்கு மூன்று தளங்கள் கொண்ட வர்த்தக மையம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகத்தில், 185 கடைகள், ஆய்வகங்கள், உணவகங்கள், பார்வையாளர் கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இத்தகைய வளாகம் இங்கு கட்டப்டட்டுள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் இந்த வளாகத்தை திறந்து வைத்து, கடை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா, சென்னை மேயர் பிரியா, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.