அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஆன்லைன்' பயிற்சி
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு 'ஆன்லைன்' பயிற்சி
ADDED : அக் 12, 2025 01:30 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில், பூத் கமிட்டிகள் அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அப்பணிகள் முழுமையடைந்துள்ளன.
எனவே, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் அதிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட, தாங்கள் சார்ந்த சட்டசபை தொகுதிகளில் கட்சி மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்.
சென்னை புறநகர், சேலம் மாநகர், கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடியாததால், அம்மாவட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து அப்பணிகளை மேற்கொள்வர்.
பூத் கமிட்டி நிர்வாகிகளை, ஆன்லைனில் ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்க, ஐ.டி., பிரிவு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, பணிகளை மாவட்டச் செயலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.