ADDED : அக் 12, 2025 01:30 AM
கோவை: கோவை அவிநாசி ரோட்டில், ரூ.1,791 கோடியில் புதிய மேம்பாலத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.
இத்திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கி துவக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கட்சியினருடன் பாலத்தின் மீது வேலுமணி பயணம் செய்து கோல்டுவின்ஸ் வரை சென்று திரும்பினார். இதனால், உப்பிலிபாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜுனன், ஜெயராம், தாமோதரன், அருண்குமார் உள்ளிட்டோர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், சட்ட விரோதமாக ஒருவரை கட்டுப்படுத்துதல், தீ அல்லது எளிதில் தீப்பிடிக்கும் பொருள் குறித்து அலட்சியமாக நடந்து கொள்வது, பொதுமக்களுக்கு தொந்தரவு ஆகிய நான்கு பிரிவுகளில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், பீளமேடு போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.