ADDED : அக் 12, 2025 01:29 AM

சென்னை: ''இயேசு மேல் ஆணையாக, யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்,'' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில், பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவ பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சீமான் பேசியதாவது:
தி.மு.க., - த.வெ.க., இடையேதான் போட்டி என்கின்றனர். ஆனால், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், இப்படி சொன்னவர்கள் ஏன் போட்டியிடவில்லை. தமிழகத்தில் இரண்டே இரண்டு போட்டி தான், திராவிடமா, தமிழ் தேசியமா?
என் முன்னோர்கள் தான் எனக்கு பெரியார். சொந்த பெரியார்கள் ஆயிரம் இருக்க, எங்கிருந்தோ வந்தவர் எனக்கு எப்படி பெரியாராக இருக்க முடியும்? அரை, கால் சதவீதம் ஓட்டு இருக்கும் கட்சிகளுடன் கூட, கூட்டணி பேசும் பா.ஜ., எட்டரை சதவீதம் இருக்கும் என்னை கூட்டணிக்கு அழைத்து இருக்க மாட்டார்களா?
எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும் தேர்தலுக்காக யாருடனும் கூட்டணி கிடையாது. தோல்வி வந்து கொண்டே இருக்கலாம். அதற்காக ஒருபோதும் துவண்டு போக மாட்டேன். இயேசு மேல் ஆணையாக சொல்கிறேன், 'எந்த காலத்திலும் யாருடனும் தேர்தல் கூட்டணி கிடையாது'.
நான் வெளிநாடுகளில் சென்று, ஹிந்து என்று அடையாளப்படுத்தினால், 'போடா மண்டு' என்று கூறுவர். கிறிஸ்தவன், இஸ்லாம், ஜாதி அடிப்படையில் யாரும் யாரையும் அடையாளப்படுத்தி கொள்ள முடியாது; என் ஒரே அடையாளம் தமிழர் தான்.
ஈ.வெ.ரா.,வை எதிர்ப்பதால், உடனே பா.ஜ., ஆதரவு நிலை என்கின்றனர். அப்படி ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? தமிழர்களுக்கு ஆதரவு என நினையுங்கள். பா.ஜ.,வை எதிர்த்தால் கிறிஸ்தவ, இஸ்லாமிய கைக்கூலி; தி.மு.க.,வை எதிர்த்தால் பா.ஜ., கைக்கூலி, மொத்தமாக அரசியலில் அதிக கூலி வாங்கியது நான்தான். அந்த கூலியை யாராவது வாங்கி கொடுத்தால் நல்லது. தி.மு.க., - பா.ஜ., காங்கிரசை எதிர்க்கிறோம். ஆனால், விஜயை எதிர்க்கவில்லை; அவரிடம் கேள்வி தான் கேட்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.