கிராமத்தினர் முதுகில் சவாரி செய்த காங்., எம்பிக்கு குவிகிறது கண்டனம்
கிராமத்தினர் முதுகில் சவாரி செய்த காங்., எம்பிக்கு குவிகிறது கண்டனம்
ADDED : செப் 08, 2025 07:40 PM

பாட்னா: வெள்ளத்தை பார்வையிட சென்ற காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வரை, அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முதுகில் தூக்கிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மக்கள் பிரச்னையை பார்வையிட சென்ற அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என காங்கிரஸ் சமாளித்துள்ளது.
வட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மேகவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பீஹாரிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் கதிஹர் தொகுதியும் ஒன்று. தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட காங்கிரஸ் எம்பி தாரிக் அன்வர் வந்தார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகு மற்றும் டிராக்டர் மூலம் சென்று பார்வையிட்டார்.
ஷிவ்நகர் - சோனகல் பகுதிகளில் அவர் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த ஒருவர் அன்வரை முதுகில் தூக்கிச் சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவ துவங்கியது. அவருக்கு எதிராக விமர்சனம் எழுந்தது.
கதிஹர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுனில் யாதவ் கூறுகையில், டிராக்டர், படகு மற்றும் பைக்கில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டோம். அப்போது நாங்கள் சென்ற வாகனம் சகதியில் மாட்டிக் கொண்டது. இன்னும் 2 கிமீ., தூரம் நடக்க வேண்டியிருந்தது. அப்போது திடீரென உடல்நலன் சரியில்லாமல் போனது. தலைச்சுற்றல் ஏற்படுவதாக கூறினார். உடனே அங்கிருந்தவர், தானாகவே விரும்பி அன்வரை அன்புடன் முதுகில் தூக்கிச் சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜவின் பூனவாலா வெளியிட்ட பதிவில், வெள்ள பாதிப்பிலும் காங்கிரசார் விவிஐபி வரவேற்பை எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளை கார்கே அவமானப்படுத்தினார். வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற தாரிக் அன்வர், நிவாரண பணிகளை இழிவுபடுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர் முதுகில் ஏறியவாறு சென்றார். காங்கிரஸ் விவிஐபி மனநிலையில் உள்ளது. ராகுல் விடுப்பு மனநிலையில் உள்ளார். ஆம் ஆத்மி தலைமறைவு மனநிலையில் உள்ளது. பிரதமர் மோடி மட்டுமே பணியாற்றும் மனநிலையில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.