இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : செப் 17, 2026 04:47 PM

புதுடில்லி: இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியின் யசோபூமி கருத்தரங்கு மையத்தில் செமிகான் மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. கடந்த 15 நாட்களை நாம் எடுத்துக் கொண்டால், இந்தியா எந்த திசையில் செல்கிறது, எவ்வளவு வேகத்தில் முன்னேறி செல்கிறது என்று நோக்கத்திற்கான பாதை நமக்கு கிடைக்கும்.
சரக்கு ரயிலுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 3ஆயிரம் கிலோ மீட்டர் பாதை பயன்பாட்டிற்கு வந்தது. நான் கடந்த 10 நாட்களைப் பற்றியும், கடந்த காலத்தில் நடந்ததை பற்றியும் மட்டும் பேசவில்லை.இது நாடு முழுவதும் வேகத்தை துரிதப்படுத்துவதுடன், தளவாடங்களை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்திக்கு புதிய பலத்தை அளிக்கும்.
இந்தியாவில் நடக்கும் ஐந்தாவது செமிகான் மாநாடு இதுவாகும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். வெளிநாட்டில் இருந்து வந்துள்ள விருந்தினர்களுக்கும் எனது சிறப்பு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நமது பாரம்பரியத்தில் கடவுள் விஸ்வகர்மா உருவாக்கம் மற்றும் கட்டுமானத்திற்கான அடையாளமாக அறியப்படுகிறார். இன்று பிரதமர் விஸ்வகர்மா திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்த கட்டுமானங்களும், மறுபக்கம், 21ம் நூற்றாண்டிற்கான தொழில்நுட்பமும் கொள்கையும் உள்ளன. தன்னிறைவு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதற்கான நோக்கத்தின் பின்னணியில் உத்வேகம் ஆகவும் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
