காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்கிரஸ் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : டிச 21, 2025 02:48 PM

குவஹாத்தி: ''காங்கிரஸ் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க எதுவும் செய்யவில்லை. அவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளை புறக்கணித்து, ஊடுருவல்காரர்களை காப்பாற்றினர்'' என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது: அசாம் மாநிலத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவதே எங்கள் நோக்கம். தொழில் மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அசாம் மாநில இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணத் தூண்டுகின்றன. யூரியா உரத் தொழிற்சாலை உள்ளூர் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அசாம் மாநில இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
உர ஆலையை நவீனமயமாக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் விவசாயிகளின் பிரச்னைகளை புறக்கணித்து, ஊடுருவல்காரர்களை காப்பாற்றினர். ஓட்டு வங்கியை பாதுகாக்க காங்கிரஸ் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது. காங்கிரஸ் செய்த தவறுகளை சரி செய்ய, பாஜ இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, எங்கள் அரசு அவர்களுக்கு ஆதரவளிக்க அயராது உழைத்து வருகிறது. நமது விவசாயிகளுக்கு தொடர்ந்து உரங்கள் விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
இந்த புதிய யூரியா தொழிற்சாலை, அந்த தேவையை பூர்த்தி செய்யும். பாஜ ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தொடங்கியது. காங்கிரஸ் அசாம் மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் அதிகாரித்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

