செந்தில் பாலாஜியுடன் மோதிய ஜோதிமணி; அவமரியாதையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கண்டனம்
செந்தில் பாலாஜியுடன் மோதிய ஜோதிமணி; அவமரியாதையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கண்டனம்
ADDED : செப் 24, 2025 06:19 PM

கரூர்: 'காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்,' என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டு, ஒரு போட்டோவை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் போட்டோவில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை; கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜென்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல.
கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல்,ஒத்துழைப்பு,நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
கரூர் பார்லிமென்ட் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் எம்பி என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.
கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக தலைவர் ஸ்டாலினின். கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
தமிழகத்தின் மொழி,இனம்,பண்பாடு,எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழக மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழகத்திற்கு நன்மை செய்யும்.
பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது, என்று குறிப்பிட்டிருந்தார்.