திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., அதிரடி திட்டம்
திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., அதிரடி திட்டம்
ADDED : அக் 16, 2025 01:48 AM

'காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய, அமைச்சர் ஐ.பெரியசாமியின் சொந்த மாவட்டமான திண்டுக்கல்லில், ராகுல் பங்கேற்கும் மாநாட்டை நடத்த வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி; 10 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு அமைச்சர் என, 4 அமைச்சர் பதவி வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூட்டணி அமைக்கவும், தேர்தலை சந்திக்கவும், டில்லி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
அடையாள அட்டை இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.
கிராம கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 24,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் நிர்வாகிகள் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நிர்வாகிகள் நியமனம் முடிந்த பின், கட்சி நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என, மொத்தம் 3 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'விரைவில் ராகுல் தலைமையில், தமிழகத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்கும் மிகப் பெரிய மாநாடு நடத்தப்படும்' என்றார்.
இதற்கிடையில் சமீபத்தில், வேடசந்துார் தெற்கு ஒன்றியத்தில் நடந்த, தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமி பேசுகையில், 'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் வருவர்' என்றார்.
பதிலடி அவருக்கு பதிலடி தரும் வகையில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, 'பெரியசாமியின் கருத்து குப்பை' என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டவும், அமைச்சர் பெரியசாமி விமர்சனத்திற்கும் பதிலடி தரவும், திண்டுக்கல்லில் ராகுல் பங்கேற்கும் மாநாடு நடத்த வேண்டும் என, தமிழக காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அம்மாவட்ட நிர்வாகிகளிடம். மாநாடு தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. பீஹார் மாநில சட்டசபை தேர்தல் பணியில் ராகுல் ஈடுப்பட்டிருப்பதால், திண்டுக்கல்லில் நடத்தும் மாநாட்டிற்கு, அவர் வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அவர் வரவில்லை என்றால், திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தி, அதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை பங்கேற்க வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்த பின், தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில், ராகுல் நேரடியாக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். எனவே, அவர் பங்கேற்கும் மாநாடு, ஜன., மாதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -