தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்': எண்ணிக்கையை துவக்குகிறார் நாகேந்திரன்
தி.மு.க., ஆட்சிக்கு 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்': எண்ணிக்கையை துவக்குகிறார் நாகேந்திரன்
ADDED : அக் 13, 2025 12:53 AM

திருப்பரங்குன்றம்:''தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்று முதல் 'கவுன்ட் டவுன் ஸ்டார்ட்' ஆகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
'தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்' என்ற தலைப்பில், மதுரையில் இருந்து பிரசார பயணத்தைத் துவக்கி இருக்கிறார் நாகேந்திரன்.
அறிக்கை தயார் முன்னதாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறிநகரில் மக்களை சந்திக்க வந்த நாகேந்திரன் கூறியதாவது:
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாங்களும் சுற்றுப்பயணம் துவங்கி, மக்கள் குறைகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளோம்.
பணத்தை மட்டுமே குறிக்கோளாக பார்க்கும் தி.மு.க., ஆட்சியை விரைவில் அகற்ற வேண்டும்.
அதற்கான முகூர்த்த நாள் இன்று குறிக்கப்பட்டு, பிரசாரம் துவக்குகிறோம். தி.மு.க., ஆட்சியில் பெண்கள், சிறுமியர் மீதான பாலியல் குற்றங்கள், லாக் - அப் மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மக்கள் சொல்ல முடியாத துயரத்தில் தவிக்கின்றனர்.
கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அது யாருடைய குற்றம். அரசாங்கத்தின் குற்றம். காவல்துறையின் குற்றம். காவல்துறையை முதல்வர் ஸ்டாலினே கையில் வைத்து இருந்தும், தினமும் படுகொலை, கிட்னி முறைகேடு நடக்கிறது. தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
பிளேடு வைத்து கிழிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் தலைகுனிவான நிலையில் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தி மக்களிடம் பேசக்கூடாது என ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே தான் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் கேட்ட இடத்தை கொடுக்காமல் குறுகலான இடத்தை கொடுத்துள்ளனர். கரூரில் சம்பவம் நடந்தபோது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகிறார். ரவுடிகள் கையில் பிளேடை வைத்து கிழித்துள்ளனர். மோசமான நிலையில் அச்சம்பவம் நடந்துள்ளது.
வி.சி.க., தலைவர் திருமாவளவன் கார், டூ - வீலர் மோதிய விவகாரத்தில் திருமாவளவன் பேசுவது வேடிக்கையாக உள்ளது. டூ-வீலரில் வந்தவர் முறைத்தார், அதனால் அடித்தனர் என்கிறார். இப்படி தான் ஒரு தலைவர் பேசுவதா?
இவ்வாறு அவர் கூறினார்.