நாடு முழுதும் முக்கிய வழித்தடங்களில் 84 சிறப்பு ரயில்கள்!: 'இண்டிகோ' விமானங்கள் ரத்தால் ஏற்பாடு
நாடு முழுதும் முக்கிய வழித்தடங்களில் 84 சிறப்பு ரயில்கள்!: 'இண்டிகோ' விமானங்கள் ரத்தால் ஏற்பாடு
UPDATED : டிச 07, 2025 01:32 AM
ADDED : டிச 07, 2025 01:24 AM

புதுடில்லி: நாடு முழுதும், 'இண்டிகோ' விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால், பயணி யரின் வசதிக்காக முக்கிய வழித்தடங்களில், 84 கூடுதல் சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. ஒரு சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
பணி நேரக்கட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்னை களை சந்தித்து வரும், 'இண்டிகோ' விமான நிறுவனம், நாடு முழுதும் விமான சேவைகளை ரத்து செய்து வருகிறது.
இதனால், திட்டமிட்டபடி பயணங்களை தொடர முடியாமல் ஆயிரக்கணக்கான பயணியர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட பயணியர் தடையின்றி பயணங்களை தொடர, முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது.
நேற்றிரவு நிலவரப்படி, இதுவரை, 84 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.
நீட்டிக்க திட்டம்
இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுதும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, பாட்னா, ஹவுரா உட்பட முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கூடுதலாக, 84 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புனே - பெங்களூரு, புனே - டில்லி, மும்பை - புதுடில்லி, மும்பை - கோவா, லக்னோ - மும்பை, நாக்பூர் - மும்பை, கோரக்பூர் - மும்பை தடங்களில் தற்போது கூடுதலாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து புதுடில்லிக்கு நேற்று சிறப்பு ரயில் புறப்பட்டது. இது, மறுமார்க்கத்தில் நாளை ஹவுரா திரும்பும். மும்பை - மட்காவ்ன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாளை அங்கிருந்து திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இந்த சேவையை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
பெங்களூரு - அகர்தலா இடையிலான ஹம்சபர் எக்ஸ்பிரஸ், மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ், மும்பை - மங்களூரு எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் ஏ.சி., பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு - திப்ருகார் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரசில் மூன்று ஏ.சி., பெட்டிகளும், சண்டிகர் - அமிர்தசரஸ் இடையிலான சதாப்தி ரயில்களில் கூடுதல், 'சேர் கார்'களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுவரை, 37 ரயில்களில் கூடுதலாக, 116 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 5 லட்சம் பயணியர் பயனடைவர்.
புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டதை அடுத்து, நாள்தோறும், 35,000 பயணியர் பயனடைந்து வருகின்றனர். நிலைமை சீராகும் வகையில், 26 லட்சம் பேர், இந்த கூடுதல் வசதியை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான போக்குவரத்து இடையூறு தொடர்ந்தால், அதிக தேவை உள்ள வழித்தடங்களில், ஏ.சி., வசதியுடன் கூடிய சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்தும் ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது தொடர்பான அட்டவணைகளை, பாதிக்கப்பட்டுள்ள பயணியருக்கு தெரிவிக்குமாறு, முக்கிய விமான நிலையங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
@Image@சென்னையிலிருந்து நாகர்கோவில்,
கோவைக்கும் அறிவிப்பு
கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, இன்று காலை 8:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 2:45 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து இன்று மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, நாளை காலை 8:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 2:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:45 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் நாகர்கோவில் இருந்து, இன்று இரவு 11:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:15 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, நாளை மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, இன்று மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:20 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து, நாளை மதியம் 1:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு செல்லும் கோவையில் இருந்து, இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:20 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, நாளை பகல் 12:20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:30 மணிக்கு கோவை செல்லும்.

