அரசியல் மேடையாக கோர்ட்டை பயன்படுத்த அனுமதிக்க முடியாது' : சென்னை உயர் நீதிமன்றம்
அரசியல் மேடையாக கோர்ட்டை பயன்படுத்த அனுமதிக்க முடியாது' : சென்னை உயர் நீதிமன்றம்
ADDED : அக் 31, 2025 06:14 AM

சென்னை: 'நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கை தள்ளிவைத்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்தின் பெயர்களையும், சட்டப் பிரிவுகளிலும், தண்டனையிலும் மாற்றம் செய்து, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு மாற்றாக, பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் என்ற பெயர்களில் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, கடந்தாண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டங்களை அரசியலமைப்புக்கு விரோதமானதாக அறிவித்து, அவற்றை ரத்து செய்ய வேண்டும் என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'மூன்று சட்டங்களை நிறைவேற்றும்போது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
பார்லிமென்டில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாத நிலையில், அவசர கதியில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன' என கூறப்பட்டது.
இதை கேட்ட தலைமை நீதிபதி கூறியதாவது:
'முறையான கலந்தாலோசனை நடத்தவில்லை; தங்கள் கருத்துக்கள் பரிசீலிக்கப்படவில்லை; போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லை' என்ற காரணங்களை கூறி, இந்த சட்டங்களை எதிர்த்து, எப்படி வழக்கு தொடர முடியும்?
இவற்றை கூறி சட்டம் இயற்றும் தகுதியை எதிர்க்க முடியாது. இது சம்பந்தமான தீர்ப்புகள் ஏதும் இருந்தால் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
அப்போது, தி.மு.க., தரப்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'வேண்டுமானால், தனி மனுவாக தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் இடையீட்டு மனுவை ஏற்க முடியாது.
'மேலும், இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது' என கூறி, விசாரணையை அடுத்த மாதம் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

