திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வாங்க: ஹிந்து முன்னணி அழைப்பு
ADDED : அக் 31, 2025 05:46 AM

திருப்பூர்:  ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.
இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.
மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, ஹிந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மறைந்த ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் நடத்திய சட்டப் போராட்டம் இதற்கான தீர்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தீர்ப்பு வந்து பல ஆண்டுகளாகியும் கோவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வழிபாடு நம் உரிமை; நீதிமன்றமும் சட்டப்படி அதை உறுதி செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதை மாற்றும் வகையில், வரும் திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபட, முருக பக்தர்கள், ஆன்மிக குழுவினர், பாத யாத்திரை, காவடி குழுவினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

