மலாக்கா ஜலசந்தியில் உருவானது 'சென்யார்' புயல்; வானிலை ஆய்வு மையம்
மலாக்கா ஜலசந்தியில் உருவானது 'சென்யார்' புயல்; வானிலை ஆய்வு மையம்
ADDED : நவ 26, 2025 10:01 AM

சென்னை: அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் புயல் உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மலேஷியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டு உள்ளது.
மேற்கு, வடமேற்கு திசையில் மேலும் வலுவடைந்து நகரக்கூடும். இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும். அதன்பின், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தமிழகத்தில் தென் மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில், டிசம்பர், 1ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

