ADDED : நவ 03, 2026 05:50 AM

சென்னை: அதிக மழை பெய்தும், அணைகள் பல நிரம்பாமல் உள்ளன.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. தற்போது, வட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது; ஆனால், அணைகளின் நீர்மட்டம் பெரிதாக உயரவில்லை. மொத்தமுள்ள 90 அணைகளில், 75.7 டி.எம்.சி., மட்டுமே நீர் இருப்பு உள்ளது; இது, 33.7 சதவீதமாகும்.
மூன்று அணைகள் மட்டுமே நிரம்பியுள்ளன; 43 அணைகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பே உள்ளது. இவற்றில், 24 அணைகளில், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. அதிக மழை பெய்தும் அணைகள் நிரம்பாததற்கு, சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் தான் காரணம் என, நீர்வளத் துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து, அணைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'எல் நினோ' எனும் காலநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவ மழை குறைந்தது. இதனால், பல அணைகளில் நீர் இருப்பு குறைந்து, தரைமட்டம் தென்படத் துவங்கியது. கடுமையான வெயில் காரணமாக, வண்டல் மண் தரையில் பிளவு ஏற்பட்டது.
தற்போதைய மழையால், அணைகளின் வறண்ட பகுதிகளில் தண்ணீர் வேகமாக உறிஞ்சப்படுகிறது. இதனால், அணையில் நீர் இருப்பு இல்லை. அணைகளின் தரைப்பகுதியின் ஈரத்தன்மை அதிகரித்தால் தான், நீர்மட்டம் உயரும். அதற்கு, தொடர்ச்சியாக மழை பெய்ய வேண்டும்.
தற்போதுள்ள நிலையில், தென்காசி - குண்டாறு, கன்னியாகுமரி - மாம்பழத்துறையாறு, தேனி - சோத்துப்பாறை, விருதுநகர் - சாஸ்தா கோவில், குல்லுார் சந்தை, திண்டுக்கல் - வர்தமா நதி அணைகளில், 95 சதவீத்திற்கு மேல் நீர்இருப்பு உள்ளது. கோவை மண்டல நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பாலக்காடு துாணக்கடவு பெருவாரிபள்ளம் அணையிலும், 95 சதவீதத்திற்கு மேல் நீர் இருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
