டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உயிரிழப்பு 627 ஐ தாண்டியது
டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உயிரிழப்பு 627 ஐ தாண்டியது
UPDATED : டிச 07, 2025 10:37 PM
ADDED : டிச 07, 2025 07:05 PM

கொழும்பு: இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஐ தாண்டியுள்ளது. மாயமான 190 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அண்டை நாடான இலங்கை, 'டிட்வா' புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டில் இதுவரை இது போன்ற இழப்போ, சேதமோ ஏற்பட்டதில்லை. ' ஆப்பரேஷன் சார்பந்து' என்ற திட்டத்தின் கீழ் அந்நாட்டுக்கு நம் நாடு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன்படி உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்,நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர்.
நடமாடும் மருத்துவமனைகள் மூலம் 1,250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ள இந்திய ராணுவம், 3 இரும்புப் பாலம் அமைத்து கொடுத்துள்ளோம் எனக்கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஐ தாண்டியுள்ளது. மேலும் 25 மாவட்டங்களில் வசிக்கும் ஆறு லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 21.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கிய 190 பேரை காணவில்லை.
சேதம் அடைந்த வீடுகளின் குறித்த கணக்கெடுப்பு நாளை துவங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

