அல் பலாஹ் பல்கலை அகமது சித்திக்கை 13 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி டில்லி நீதிமன்றம் உத்தரவு
அல் பலாஹ் பல்கலை அகமது சித்திக்கை 13 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி டில்லி நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 20, 2025 03:47 AM

புதுடில்லி: ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவேத் அகமது சித்திக்கை, 13 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.
டில்லி செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் மூன்று டாக்டர்கள் உள்பட, 10 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
காரை ஓட்டி வந்து வெடிக்க செய்த டாக்டர் உமர் நபி மற்றும் கைதான டாக்டர்களுக்கு ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இயங்கி வரும் அல் பலாஹ் பல்கலையுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் டில்லி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, அல் பலாஹ் பல்கலை, அதன் நிறுவனங்கள், அறங்காவலர்களின் வீடுகள், அலுவலகங்கள் என, பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
அப்போது, அல் பலாஹ் ப ல்கலையில் போலி நிறுவனங்கள் மூலம் பண மோசடி நடந்ததை அமலாக்கத் துறை கண்டறிந்தது.
இதையடுத்து, அல் பலாஹ் பல்கலை தலைவர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, 'அல் பலாஹ் பல்கலை தலைவர் சித்திக், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து, 415.10 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்துள்ளார்.
அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதால், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது' என, அமலாக்கத் துறை சார்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட டில்லி நீதிமன்றம், அகமது சித்திக்கை 13 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
பல்கலை மானிய கமிஷனால், அல் பலாஹ் பல்கலை அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

