டில்லி செங்கோட்டை நாளை முதல் மீண்டும் திறப்பு: பார்வையாளர்கள் வர அனுமதி
டில்லி செங்கோட்டை நாளை முதல் மீண்டும் திறப்பு: பார்வையாளர்கள் வர அனுமதி
ADDED : நவ 15, 2025 07:37 PM

புதுடில்லி: டில்லி செங்கோட்டை பார்வையாளர்களுக்காக நாளை 16ம் தேதி முதல் எப்போதும் போல் திறக்கப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
நவ.10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் பலர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தற்கொலைப் படையினரின் கார் குண்டுவெடிப்பை அடுத்து தலைநகர் டில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும்,மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
இந் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட டில்லி செங்கோட்டை வளாகம், மக்களின் பார்வைக்காக நாளை (நவ.16) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அறிவித்து உள்ளது. எப்போதும் போல் பார்வையாளர்கள் வரலாம் என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் அருகே லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் 2 மற்றும் 3வது நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டு விட்டதாக டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்த அதே நாளில், இந்த அறிவிப்பை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

