திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: மாநிலம் முழுவதும் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
UPDATED : டிச 07, 2025 10:39 PM
ADDED : டிச 07, 2025 07:52 PM

- நமது நிருபர் -
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாமலும், அதற்கு அனுமதி வழங்காததை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
கார்த்தீகை தீபம் ஏற்ற அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று(டிச.,07) ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்து இருந்தது. இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி, உடுமலையில் தமிழக அரசை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி உள்ளிட்ட இயங்கங்களை சேர்ந்த, 145 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடுமலையில், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற, ஐகோர்ட் உத்தரவிட்டும், அனுமதிக்காமல் தடை செய்த தமிழக அரசைக் கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே, ஹிந்து முன்னணி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பைச்சேர்ந்தவர்கள் தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதன்பேரில், 12 பெண்கள் உட்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி, மரக்கடை பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி இல்லாததால், மரக்கடை பகுதியில், தடை உத்தரவு போட்ட இடம் போல காணப்பட்டது அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் வந்தவர்களையும் போலீசார்,வேனில் ஏற்றினர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., கட்சியினர் தனித்தனியாக கோஷமிட்டபடி வந்தனர். அவர்கள் அனைவரையும், போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக துாக்கி வேனில் ஏற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை
சென்னையில் கோயம்பேடு 100 அடி சாலையில், ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட, 200 க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆனால், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்தனர். அவர்ளை போலீஸார் குண்டுக்கட்டாக துாக்கி சென்றனர். அப்போது, சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த ஒருவரது மாலை அறுந்ததால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருப்பூர்
இதுபோல, திருப்பூரில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஹிந்து முன்னணி அறிவித்தது. போலீஸ் தடையை மீறி ஹிந்து முன்னணியினர் மாலை குவிந்தனர். தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு அருகே, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல, புஷ்பா சந்திப்பு பகுதியில் மாநில செயலர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கைது செய்யப்பட்டனர். ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே, கைகளில் கார்த்திகை தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் முழுதும ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில செயலர் சேவகன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மதுரையை அடுத்த எழுமலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
கோவை
தமிழக அரசை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை விமர்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில், ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதி மறுத்ததால், செல்வபுரம் ரோடு, சிவாலயா சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
செட்டி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சியினர், சாலையில் அமர்ந்து, 'தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்,' என கோஷமிட்டனர். இதையடுத்து, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட, 40க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

