காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது தாமதம்; 'அர்னாப்' புயல் குறித்து வானிலை மையம் அப்டேட்!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வது தாமதம்; 'அர்னாப்' புயல் குறித்து வானிலை மையம் அப்டேட்!
ADDED : அக் 25, 2026 07:38 PM

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (அக்டோபர் 25), 8:30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
பின், மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம், 5 கி.மீ.,யாக குறைந்தது. இதன் நகர்வு வேகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை, 'அர்னாப்' புயலாக மாறலாம். நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி, ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
16 மாவட்டங்களில்...
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
