ஆண்டுக்கு ரூ.3 கோடி வசூலாகியும் உதவியின்றி ஆவண எழுத்தர்கள் தவிப்பு
ஆண்டுக்கு ரூ.3 கோடி வசூலாகியும் உதவியின்றி ஆவண எழுத்தர்கள் தவிப்பு
ADDED : நவ 03, 2025 12:42 AM

சென்னை: பத்திரப்பதிவு செய்வோரிடம் இருந்து, ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆவண எழுத்தர் நல நிதி வசூலானாலும், அதை பயன்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை என, புகார் கூறப்படுகிறது.
தமிழகத்தில், 587 சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆண்டுக்கு, 30 முதல், 35 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பத்திரங்களை தயாரித்து கொடுக்க, ஆவண எழுத்தர்கள் உள்ளனர்.
தேர்வு இல்லை தற்போதைய நிலவரப்படி, மாநில உரிமம் பெற்றவர்கள், 2,512; மாவட்ட உரிமம் பெற்றவர்கள், 1,828; உப மாவட்ட உரிமம் பெற்றவர்கள், 273 என மொத்தம், 4,613 பேர் ஆவண எழுத்தர்களாக செயல்படுகின்றனர்.
புதிய உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்தது; இதுவரை தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், புதிதாக யாரும் உரிமம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆவண எழுத்தர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், ஆவண எழுத்தர்கள் நல நிதியம் ஏற்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி, 2021ல் ஆவண எழுத்தர் நல நிதியம் ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான நிதி ஆதாரம் கிடைக்க, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தாக்கலாகும் ஒவ்வொரு பத்திரத்துக்கும், 10 ரூபாய் வீதம் ஆவண எழுத்தர் நல நிதி வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இந்த அடிப்படையில், ஆண்டுக்கு, 3 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிதியை பயன்படுத்தி, ஆவண எழுத்தர்களுக்கு என்ன உதவிகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
இதுகுறித்து, ஆவண எழுத்தர்கள் கூறியதாவது:
ஆவண எழுத்தர் நல நிதியை பயன்படுத்த, பதிவுத்துறை தலைவர் தலைமையில், 2022ல் குழு அமைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஆவண எழுத்தர் நிதியத்தில், 3,072 பேர் உறுப்பினர்களாக இணைந்துஉள்ளனர்.
ரூ.10 கோடி உறுப்பினர்களாக இணைய ஒவ்வொருவரிடம், 1, 000 ரூபாய் வசூலிக்கப்படும். அத்துடன், பத்திரப்பதிவில் வசூலிக்கும் நிதியையும் சேர்த்து, 10 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நல நிதியை பயன்படுத்தி, ஆவண எழுத்தர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இன்னமும் அதற்கான குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், ஆண்டுக்கு 3 கோடி வசூலாகியும் நலத்திட்ட உதவிகள் கிடைக்காத நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

