கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்: லால்பாக்கின் ராஜா சிலை கடலில் கரைப்பு
கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்: லால்பாக்கின் ராஜா சிலை கடலில் கரைப்பு
ADDED : செப் 08, 2025 12:01 AM

மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட, 'லால்பாக்கின் ராஜா' உள்ளிட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தி, கடந்த 27ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில், பிரமாண் ட விநாயகர் சிலைகள் பந்தல்களில் 10 நாட்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வை, 'ஆனந்த சதுர்த்தி' என அழைக்கின்றனர்.
மும்பையில் பந்தல்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி, நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மேளதாளம் முழங்க பக்தர்கள், 'கணபதி பாப்பா மோரியா' என பக்தி கோஷமிட்டபடி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மும்பையில் மிகவும் பிரபலமான லால்பாக்கின் ராஜா என்ற விநாயகர் சிலை உட்பட, பந்தல்களில் வைக்கப்பட்டிருந்த 5,855 சிலைகள், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 30,468 சிலைகள் நேற்று முன்தினம் காலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
விடிய விடிய ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த சிலைகள், நேற்று காலை கிர்கான் சவுபாட்டி கடற்கரையை அடைந்தன. லால்பாக்கின் ராஜா சிலையை படகில் ஏற்றி, நடுக்கடலுக்கு கொண்டு சென்று கரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகனும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான அனந்த் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.