இந்தியர்களுக்கு சிரமம்: எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க அரசிடம் மத்திய அரசு கவலை
இந்தியர்களுக்கு சிரமம்: எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க அரசிடம் மத்திய அரசு கவலை
ADDED : டிச 26, 2025 07:23 PM

புதுடில்லி: எச்1 பி விசா தொடர்பான பிரச்னைகளை அமெரிக்க அரசிடம் எடுத்துக்கூறியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 85,000 விசாக்கள் வழங்கப்பட்டால், அதில் 70 சதவீதத்தை இந்தியர்களே பெறுகின்றனர். இந்தாண்டு துவக்கத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டொனால்டு டிரம்ப் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகளை அவர் கொண்டு வந்துள்ளார். அந்நாட்டு குடியேற்ற கொள்கை மற்றும் விசா நடைமுறைகளில் கெடுபிடி காட்டிய டிரம்ப், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 89 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்யவும் சமீபத்தில் உத்தரவிட்டார். இதனால், எச்1பி விசா பெறுவதில் பலருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்காக கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறையும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும், விசா வழங்குவதற்கான நேர்முகத் தேர்வையும் அமெரிக்க அரசு ஒத்திவைத்தது.எச்1பி விசாவை அதிகளவு இந்தியர்கள் பெற்று வந்த நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எச்1 பி விசா தாமதம் தொடர்பான கவலைகளை அமெரிக்காவிடம் முறையாக எடுத்துக்கூறியுள்ளோம். இப்பிரச்னையால் பணி நியமனங்கள் மற்றம்நடைமுறை சிக்கல்களை இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர். நேர்முகத் தேர்வுகளில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட விசா தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக இந்தியர்கள் தங்களது புகார்களை அரசிடம் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்னைகள் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடமும், அமெரிக்க அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். விசா பிரச்னை காரணமாக பல விண்ணப்பதாரர்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பிரச்னைகை சந்திக்கின்றனர். நிலைமையை சரி செய்ய அமெரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தியர்களுக்கான விசா செயல்முறையை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்திய அரசு, அமெரிக்க தரப்புடன் தீவிரமாக விவாதித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

